
சனிமூலை இருள்கட்ட
தட்டான்கள் தாழப்பறக்க
பெருசுகள் பல்லிளிக்க
கொட்டோகொட்டென கொட்டியது மழை.
கூரை வீட்டின் மேல்
கிளம்பும் ஆவிப்புகை.
தார்சாலையின் பெட்ரோல் துளியோடு
கரைந்தோடும் மழைத்துளிகள்.
மழை குண்டுகள் விழுந்து
உருக்குலைந்துபோன மாட்டுச்சாணம்.
சாலையோர
சிறார்களின் கழிவு
குழல் விளக்கு பூச்சிகளை
வேட்டையாடும் பல்லிகள்.
விளக்கு தீயில்
விட்டில் பூச்சிகளை
சீவாங்குச்சி முனையில் கருக்கும் சிறார்.
தாத்தாக்களின் காதோரத்து
முனைக்கருகிய குமரன் பீடி.
இவையெல்லாம் விட....
சிவப்பு மரவட்டையை
காகிதத்தில் மடித்து தர
பொட்டலம் என
பிரித்து பயந்த தங்கச்சியும்.
அடுப்பு அணல் கதகதப்பை
உள்ளங்கையில் சிறைபிடித்து
என் பிஞ்சு கன்னம் அப்பிவிட்ட
அம்மாவுந்தான்
என் மழைக்கால ஞாபகங்கள்....
தோழர் - அறிவுக்கரசு.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment